கோரிக்கை பதிவு

கடலூர் மாவட்டத்தில் ரூ. 14 கோடியில் நீர்வள மேம்பாட்டு திட்டம்

கடலூர் மாவட்டத்தில் கெடிலம் ஆறு வடிநிலப் பகுதிகளில் நீர்வள மேம்பாட்டு திட்டம் ரூ. 14 கோடியில் நிறைவேற்றப்பட இருக்கிறது. இது குறித்து மக்களிடையே விழிப்புணர்வுப் பிரசாரம் செய்யும் ஊர்தியை, வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) தொடங்கி வைத்தார். பல்வேறு துறைகளையும் ஒருங்கிணைத்து, உலக வங்கி நிதிஉதவியுடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. இதில் கெடிலம் ஆற்றில் உள்ள திருவந்திபுரம், திருவதிகை, வானமாதேவி அணைகளைச் சீரமைத்தல் மற்றும் 37 ஏரிகள், வாய்க்கால்கள், கண்மாய்கள் ஆகியவற்றின் மதகுகளைச் சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. நீர்ப்பாசனச் சங்கங்கள் அமைத்து அவைகள் மூலம் இப்பணிகள் நிறைவேற்றப்படும். மாற்றுப்பயிர் சாகுபடி, பழத் தோட்டங்கள் அமைத்தல், காய்கறி பயிரிடுதல், செம்மை நெல் சாகுபடி, சொட்டுநீர்ப் பாசனம், பண்ணைக் குட்டைகள் அமைத்தல், மீன் வளர்ப்பு, உள்ளிட்ட பல்வேறு பணிகளும் இதில் எடுத்துக் கொள்ளப்படும். வேளாண் துறை, தோட்டக் கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை உள்ளிட்ட அரசுத் துறைகள் மூலமாக இத்திட்டம் செயல்படுத்தப்படும். ரூ. 14 கோடியில் இத்திட்டங்கள் 3 ஆண்டுகளில் (2013 வரை) நிறைவேற்றப்பட இருக்கிறது. இத்திட்டம் குறித்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த, பிரசார ஊர்தி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த ஊர்தி கெடிலம் வடிநிலப் பகுதிகளில் உள்ள 21 கிராமங்களுக்குச் சென்று பிரசாரம் மேற்கொள்ளும். பிரசார ஊர்தியின் பணியை வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) எஸ்.நடராஜன் கொடி அசைத்துக் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் வெள்ளாறு உபவடிநிலக் கோட்ட உதவி செயற்பொறியாளர் அன்பு இளங்கோ, உதவி செயற்பொறியாளர்கள் குணசேகரன், குமார், திருச்சி பாசன மேலாண்மை பயிற்சி நிலைய உதவிப் பொறியாளர் முருகவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக