கோரிக்கை பதிவு

அண்ணாமலைப் பல்கலையில் தமிழர்களக்கு 85% இடங்கள் கேட்டு ஆர்ப்பாட்டம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு 80 விழுக்காடு இடங்களை ஒதுக்கக் கோரிக்கை விடுத்து, தமிழக மாணவர் முன்னணி சார்பில் நேற்று(31.03.2010) மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இப்போராட்டத்திற்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் சிதம்பரம் நகரச் செயலாளர் கு.சிவப்பிரகாசம் தலைமை தாங்கினார். தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் தே.அரவிந்தன் முன்னிலை வகித்தார். ”அக்னிச் சிறகுகள்” குபேரன் கண்டன உரையாற்றினார். இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்துப் பேசினார். அவர் பேசியதாவது:

அண்மையில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வடநாட்டு மாணவர் ஒருவர் ஹோலிப் பண்டிகை கொண்டாட்டத்தின் போது, குடித்து விட்டு பைக் ஒட்டி விபத்தில் இறந்து போனார். அதற்கு பதிலடியாக வடநாட்டு மாணவர்கள் 500க்கும் மேற்பட்டவர்கள் நம் மருத்துவமனையின் கண்ணாடிகளை, ஆம்புலன்சு வண்டிகளை உடைத்து நொறுக்கியுள்ளனர்.

இந்த சம்பவம் நமக்கு 2 செய்திகளை கூறியிருக்கிறது. ஒன்று, வடநாட்டு மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் இங்குப் படிப்பதும், இரண்டாவதாக அவர்கள் ஒருங்கிணைந்த முறையில் இருப்பதையும் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.

இந்த மாணவர்கள் துணை வேந்தரை சந்திக்க முற்பட்ட போது அதற்கு மறுப்புத் தெரிவித்திரிக்கிறார் அவர். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மாணவர்கள் பிரச்சினைகளைத் தீர்க்கத் தான் துணை வேந்தர் பதவியே. அந்தப் பதிவியில் இருந்து கொண்டு அவர் சந்திக்க மறுத்தது நியாமில்லை. வடநாட்டு மாணவர்களாக இருந்தாலும், தமிழ் மாணவர்களாக இருந்தாலும் அவர்களது பிரச்சினைகளைத் தீர்க்கத் தானே அந்தப் பதவி. துணை வேந்தர் இதனை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

வடநாட்டு மாணவர்கள் இங்கு படிப்பதோடு அல்லாமல் இங்கு அடாவடித்தனங்களில் ஈடுபடுவதும், வகுப்புகளை ஹிந்தியில் நடத்த வலியுறுத்துவதும், தமிழ் மாணவர்களை கேலி செய்வதும் இங்கு நடக்கிறது. அவர்கள் படித்து முடித்ததும் இங்கெயே தங்கி, வேலை புரிந்து, தங்கள் குடும்பங்களை இங்கேயே குடியமர்த்தி ஆக்கிரமிப்பில் ஈடுபடுகிறார்கள்.

இலங்கையில் சிங்கள அரசு தமிழர் பகுதிகளில் எப்படி திட்டமிட்டு சிங்களர்களை குடியமர்த்துகிறதோ, அதைப் போல இந்திய அரசு தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர் குவிவதை விரும்புகிறது. இதற்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகம் துணை போகக் கூடாது.

இந்நிலை நீடித்தால், நமது மண்ணில் பெரும் எண்ணிக்கையில் அவர்கள் குடியேறி ஆக்கிரமிப்பு செய்வார்கள். எனவே, பல்கலைக்கழக நிர்வாகம் பணத்தாசைக்கு ஆட்படாமல் வரும் கல்வியாண்டில் 85 விழுக்காடு இடங்களை தமிழக மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். நாங்கள் கேட்பது பீகாரிலோ, உத்திரப்பிரதேசத்திலோ அல்ல.

தமிழ்நாட்டில் செயல்படுகின்ற, தமிழர்களின் வியர்வையிலும் உழைப்பிலும் கட்டப்பட்ட இப்பல்கலைக்கழகத்தில் தான் தமிழர்களுக்கு இடங்களை ஒதுக்குங்கள் என கேட்கிறோம். இது சலுகைப் போராட்டம் அல்ல,  இன உரிமை போராட்டம் என்பதை நாம் உணர வேண்டும். நம் மண்ணை அயலாரிடமிருந்து மீட்க நாம் ஒன்று திரள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். இப்போராட்டத்தில் தமிழ் மாணவர்கள் பெருமளவில் திரண்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். முடிவில், திரு. சௌந்தரராசன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி தெரிவித்துப் பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக