கோரிக்கை பதிவு

ரூ.71 லட்சம் செலவில் சாலை விரிவாக்க பணி தீவிரம்

கடலூர் அருகே ரூ. 71 லட்சம் மதிப்பில் அழகியநத்தம் - மருதாடு கிராம சாலை விரிவாக்கம் செய்யும் பணி நடந்து வருகிறது.
கடலூர் பகுதியில் இருந்து 15 கிராமங்களுக்கு இதன் மூலம் துரிதமான போக்குவரத்திற்கு வகை செய்யப்பட்டுள்ளது.
கிராமப்புற சாலைகள் பெரும்பாலும் அகலத்தில் குறைந்தும் கனரக வாகனங்கள் சிரமமான பயணத்தை ஏற்படுத்தும் நிலையில் அமைந்துள்ளது. இதன் நிலையை மாற்றியமைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத்துறை கிராமப்புற சாலை விரிவாக்க திட்டத்தின் கீழ் கிராமங்களில் உள்ள பிரதான சாலைகளை இருவழி போக்குவரத்திற்கு ஏற்ற வகையில் மாற்றியமைத்து வருகிறது.
இதில் ஒரு பகுதியாக கடலூர் ஒன்றியத்தில் தூக்கணாம்பாக்கம் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட திட்டத்தால் 
தமிழக - புதுச்சேரி பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயன்பெற்றுள்ளன. இதுபோன்று தற்பொழுது கடலூர் அருகே உள்ள அழகியநத்தம் - மருதாடு சாலை விரிவாக்கம் செய்யும் பணி நடந்து வருகிறது.
அழகியநத்தம் பெண்ணையாற்று பாலத்தில் இருந்து மருதாடு கிராமத்தில் கடலூர் - நெல்லிக்குப்பம் பிரதான சாலையை இணைக்கும் வகையில் இக்கிராம சாலை விரிவாக்க திட்டம் 3.4 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.71 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. விரிவாக்க பணியால் 3.45 மீட்டர் அகலம் கொண்ட சாலை 1.75 மீட்டர் புதிதாக அமைக்கப்பட்டு 
5.5 மீட் டராக மாற்றப்படுகிறது.
இதன் மூலம் இருவழி போக்குவரத்திற்கு தடையில்லாமல் வாகனங்கள் பயணிக்க முடியும். கடந்த பிப்ரவரி மாதம் துவங்கிய பணி 6 மாத காலத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இச்சாலை விரிவாக்கத்தினால் கடலூரில் இருந்து மருதாடு, அழகியநத்தம், இரண்டாயிர விளாகம், அகரம், கடுவானூர், கிருஷ்ணாபுரம், நத்தம் மற்றும் புதுச்சேரி மாநிலம் கிருமாம்பாக்கம் உள்ளிட்ட 15 கிராமங்களுக்கு விரைவாக செல்லமுடியும். சாலை விரிவாக்க பணி நன்மை என்றாலும் சாலையின் ஒரத்தில் இருந்த பழமையான மரங்கள் வெட்டப்பட்டுள்ளன.
சுற்றுசூழல் கருத்தில் கொண்டு வெட்டிய மரங்களுக்கு பதில் புதிய மரக்கன்றுகள் வைத்து மரங்களை உருவாக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
15 கிராமங்கள் பயன்பெறும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக