கோரிக்கை பதிவு

கடலூர் அருகே லஞ்ச ஒழிப்பு அலுவலகத்துக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பு

கடலூர் அருகே கங்கணாங்குப்பத்தில் காவல்துறையின் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவிற்கு கட்டிடம் கட்ட ஒதுக்கப்பட்ட இடம் ஆக்கிரமிக்கப்பட்டு பயிரிடப்பட்டு வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் காவல் துறையில் சட்டம் ஒழுங்கு, சிறப்பு பிரிவு என பல்வேறு பிரிவுகள் செயல்பட்டு வருகிறது. இதில் ஒரு பிரிவாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு செயல்படுகிறது.
மாவட்ட அளவில் செயல்படும் இப்பிரிவின் அலுவலகம் கடலூர் அண்ணா நகரில் தனியார் இடத்தில் வாடகைக்கு இயங்கி வருகிறது. அனைத்து துறைகளில் நடக்கும் லஞ்சம் தொடர்பான வழக்கு களை விசாரிக்கவும், லஞ்சம் பெறுபவர்களை பிடிக்கவும் செயல்படும் இப்பிரிவிற்கு நிரந்தர கட்டிடம் அரசு சார்பில் அமைக்க முடிவு செய்யப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கடலூர் அருகே உள்ள கங்கணாங்குப்பத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டது. சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் உள்ள இடத்தில் சம்பந்தப்பட்ட பிரிவின் அலுவலகம் மற்றும் பணியாற்றும் காவலர்களுக்கான குடியிருப்பு கட்ட திட்டமிடப்பட்டது.
மாவட்ட அளவில் செயல்படும் இந்த அலுவலகத்திற்கு லஞ்சம் குறித்து புகார் கொடுக்க வருபவர்கள் கங்கணாங்குப்பத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடத்தை எளிதில் கண்டுபிடித்து வர இயலாது என்று சம்பந்தப்பட்ட ஊழல் தடுப்பு பிரிவினர் காவல் துறையிடம் கூறியுள்ளனர். இதையடுத்து ஒதுக்கீடு செய்யப்பட்ட இடம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் காவல் துறைக்கான இடத்தில் சுற்றுப்புற கிராம விவசாயிகள் சிலர் நெல் நடவு செய்து பயிரிட்டு வருகின்றனர். அரசு துறைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் விளைநிலமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது குறித்து லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல்துறை அதிகாரியிடம் கேட்ட போது, தற்பொழுது இப்பிரிவில் ஒரு டிஎஸ்பி, 2 இன்ஸ்பெக்டர் உள்பட 17 போலீசார் பணியாற்றி வருகின்றனர். போலீஸ் குடியிருப்பு மற்றும் அலுவலகத்திற்காக கங்கணாங்குப்பத்தில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் பிரிவின் முக்கியத்துவம் கருதி கடலூர் நகரிலேயே இடம் ஒதுக்கீடு செய்ய மாவட்ட காவல் துறையிடம் கோரப்பட்டுள்ளது.
இடம் ஒதுக்கீடு செய்தவுடன் கங்கணாங்குப்பம் இடம் மீண்டும் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும். தற்பொழுது கங்கணாங்குப்பத்தில் வேலி அமைத்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடம் பாதுகாப்பாகத்தான் வைக்கப்பட்டுள்ளது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக