கோரிக்கை பதிவு

ரூ. 470 கோடியில் வெள்ளத்தடுப்பு, மராமத்துப் பணிகள்

கடலூர் மாவட்டத்தில் மழைக் காலத்தில் ஏற்படும் வெள்ளச் சேதங்களைத் தடுக்கவும், ஆறுகள், ஏரிகள், வாய்க்கால்கள் மராமத்துப் பணிகளுக்கும் ரூ. 470 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.மாவட்ட விவசாயிகள் குறைகேட்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வெள்ளிக்கிழமை நடந்தது. கூட்டத்தில் ஆட்சியர் பேசியது:இந்த நிதியில் இருந்து ரூ. 106 கோடியில் கொள்ளிடம் வடக்குக்கரை சீரமைப்புப் பணிகள், ரூ. 26 கோடியில் வீராணம் ஏரி சீரமைப்புப் பணிகள், ரூ. 7.5 கோடியில் கான்சாகிப் மராமத்துப் பணிகள் உள்ளிட்ட பணிகள் நடைபெற இருக்கிறது.÷இது தொடர்பாக பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளருடன் 15-2-2010 அன்று விவாதிக்கப்பட்டது. இந்த நிதியில் இருந்து முதல் கட்டமாக ரூ. 353 கோடி விடுவிக்கப்பட்டு உள்ளது.இந்தப் பணிகளை இப்பகுதி விவசாயிகளைக் கலந்து ஆலோசித்து மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்து இருக்கிறேன். வீராணம் சீரமைப்புத் திட்டத்தில் ஏரியின் முழு கொள்ளளவுக்கு நீர் பிடிக்கும் போது, ஏரியின் மேற்குக்கரை நிலங்கள் தண்ணீரில் மூழ்கி விடுவதைத் தடுக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறேன்.விவசாயிகள் தங்கள் குறைகளை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் நேரடியாகத் தெரிவிக்கலாம்.இது குறித்து அவர் பதிவேடு ஒன்றை பராமரிக்க வேண்டும். அந்தப் பதிவேடு வாரம்தோறும் எனது பார்வைக்கு வைக்கப்பட வேண்டும் என்றார் ஆட்சியர்.விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் ரவீந்திரன்: கடலூர் மாவட்டத்தில் தற்போது அறுவடை முடிவுக்கு வந்துள்ளது. எனவே வெள்ளத் தடுப்பு மற்றும் ஏரிகள், குளங்கள், வாய்க்கால்கள் மராமத்துப் பணிகளை இப்போதே தொடங்க வேண்டும்.கடலூர் மாவட்டத்தில் உண்மையான ரேஷன் கார்டுகள் 1 லட்சம் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் வழங்கல் அலுவலகங்களில் அலைக்கழிக்கப்படுகிறார்கள். ரேஷன் கடைகளில் அரிசியின் தரம் மோசமாக உள்ளது. வாலாஜா ஏரி பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் ராமானுஜம்: வாலாஜா ஏரிக்கு ஒரு கரை மட்டுமே உள்ளது. இதனால் அதிகரித்து விட்ட ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கரை அமைக்க வேண்டும்.வாலாஜா ஏரியை ஆழப்படுத்த என்.எல்.சி. 3 ஆண்டுகளுக்கு முன் அறிவித்த ரூ. 25 கோடி திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.பாசிமுத்தான் ஓடை விவசாயிகள் சங்கத் தலைவர் ரவீந்திரன்: மழை காலங்களில் சிதம்பரம் நகரம் வெள்ளத்தால் பாதிக்கப்படுவதற்குக் காரணம் பாசிமுத்தான் ஓடையில் தாங்கும் அளவைவிட கூடுதலாகத் தண்ணீர் வருவதுதான். எனவே பாசிமுத்தான் ஓடை கரைகளை சீரமைக்க நிதி ஒதுக்க வேண்டும்.விவசாயிகள் நலன் கருதி களத்துக்கே வந்து நுகர்பொருள் வாணிபக் கழகம் நெல் கொள்முதல் செய்ய உத்தரவிட்ட முதல் அமைச்சருக்கு நன்றி.விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல்லை சேமித்து வைக்க வசதி இல்லை. அரசு சேமிப்புக் கிடங்குகளை வியாபாரிகள் ஆக்கிரமித்து உள்ளார்கள். இதனால் அறுவடை செய்த உடனே குறைந்த விலைக்கு நெல்லை விற்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.விவசாயச் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் வெங்கடபதி: சொட்டு நீர்ப் பாசனத்துக்கு 65 சதவீதம் மானியம் அறிவித்து இருக்கிறது அரசு. அரசு குறிப்பிட்டபடி சொட்டு நீர்ப் பாசன அமைப்புகளை அமைக்க, ஏக்கருக்கு ரூ. 90 ஆயிரம் ஆகிறது. ஆனால் மானியம் 37,500 தான் வழங்குகிறார்கள். 65 சதவீதம் மானியம் வழங்க வேண்டும்.÷கரும்பு டிராக்டர்கள் சங்கத் தலைவர் வீரபாண்டியன்: விருத்தாசலத்தில் ரயில்வே மேம்பாலம் கட்டப்படுகிறது. ஆனால் வாகனப் போக்குவரத்துக்கு மாற்றுப் பாதைக்கு வாய்ப்பு இருந்தும், சரியாக ஏற்படுத்த வில்லை.ஆட்சியர் குறுக்கிட்டு: இது குறித்து நான் கடிதம் கொடுத்தும் சம்பந்தப்பட்ட துறை நடவடிக்கை எடுக்க வில்லை. மக்களைக் கலந்து ஆலோசித்து எதையும் செய்ய வேண்டும்.சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு விவசாயிகள் சங்கத் தலைவர் விஜயகுமார்: தரமான விதை நெல் உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் முதல் இடம் வகிக்கிறது. ஆனால் உற்பத்தியாளர்களுக்கு நியாயமான விலை கிடைக்கவில்லை.கூடுதல் விலை வழங்க வேண்டும். போக்கு வரத்துச் செலவை அரசே ஏற்க வேண்டும். விதைநெல்லை பதப்படுத்த கூடுதல் வசதி வேண்டும்.வெலிங்டன் ஏரி பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் சோமசுந்தரம்: பெண்ணாடம் கரும்பு விவசாயிகள் பிரச்னைகளுக்குத் தீர்வு காண, முத்தரப்புக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.வெள்ளாற்றில் மணல் எடுப்பதில் உள்ள முறைகேடுகளை நீக்க வேண்டும். வெள்ளாற்றினால் விளைநிலங்கள் அரிக்கப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன், வேளாண் இணை இயக்குநர் இளங்கோவன், வேளாண் அலுவலர் மணி உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக