கோரிக்கை பதிவு

இந்தக் கடன்களை யார் அடைப்பது..? நமது வாரிசுகளா..? ஆட்சியாளர்களின் வாரிசுகளா..?

தினம்தோறும் செய்தித்தாள்களைத் திறந்தால் மக்களுக்கு வழங்கியிருக்கும் திட்டங்களினால் மக்கள் மகிழ்வோடு இருக்கிறார்கள்.. நிறைவாக இருக்கிறார்கள். மகிழ்ச்சியோடு காணப்படுகிறார்கள். என்றென்றைக்கும் நாங்கள்தான் முதல்வர்கள் என்கிற ரீதியில் ஆளும் கட்சியின் அடிப்பொடிகள் முழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

எதிர்க்கட்சிகளோ எதை வைத்து ஆளும்கட்சியை எதிர்ப்பது என்பது தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கின்றன. பொதுவில் வைத்துதான் கொள்ளையடித்துப் பழக்கமான ஜெயலலிதாவுக்கு பிடிபடாமலேயே கொள்ளையடிக்கும் திறன் கொண்ட கலைஞர் கூட்டணியின் சாமர்த்தியம் போதவில்லை.

என்ன செய்தால் இந்த ஆட்சி ஒழியும் என்று ஜெயலலிதாவும், இன்னும் என்னென்னவற்றை வாரி வழங்கினால் நமது அடுத்த மூன்றாவது தலைமுறை வரையிலும் நான் ஆட்சிக் கட்டிலில் இருக்கலாம் என்று ஆளும் கட்சியும் மாறி மாறி செய்து வரும் திட்டத்தில் தங்கள் தலையில் துண்டு விழுந்திருப்பதை உணராமலேயே.. தாங்கள் பலிகடா ஆக்கப்பட்டிருக்கிறோம் என்பது தெரியாமலேயே மக்கள் சந்தோஷமாக இலவச டிவியில் படம் பார்த்துக் கொண்டு இலவச கேஸ் ஸ்டவ்வில் இலவச அரிசியையும், சமையல் பொருட்களை வைத்து பொங்கி, ஆக்கி தின்று தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படி இலவசங்களை வாரி வழங்குகின்ற அரசர் தனது குடும்பத்தினர் இதுவரையில் நம்மிடமிருந்து சம்பாதித்த சொத்துக்களில் இருந்து கொடுத்திருக்கிறாரா என்றால் அதுதான் இல்லை.. அனைத்துமே நம்மிடம் இருந்தே.. நம் பெயரில் வெளி ஆளிடம் கடனாகப் பெற்று.. நமக்காக வாங்கியதாகச் சொல்லி பாதியை நம்மிடமும், மீதியை அவரிடமும் தள்ளிவிட்டு போய்க் கொண்டேயிருக்கிறார்.

எப்படியும் நமது கழுத்துக்கு ஒரு நாள் கத்தி வரும்போதுதான் இந்த உண்மை நமக்குத் தெரியும்.. புரியும். அதனால் என்ன..? அப்போது அவர்கள் இருந்தால்தானே.. இருக்கின்றவரையில் அரசராக இருந்துவிட்டு போன பின்பு எதுவாக இருந்தால் அவர்களுக்கென்ன..? மாட்டப் போவது நாம்தானே.. நம் வாரிசுகள்தானே.. அவர்களது வாரிசுகள் இல்லையே..? அவர்கள்தான் இப்போது தமிழகத்திலேயே முதன்மையான பணக்காரர்களாகிவிட்டார்களே..!


இதுவரையில் ஆண்ட தமிழக அரசுகள் வாங்கிக் குவித்திருக்கும் கடன் தொகையை இங்கே பட்டியலிட்டிருக்கிறது ஒரு பத்திரிகையின் கட்டுரை. (தினமலர் என்று நினைக்கிறேன்) படித்துப் பாருங்கள். உங்களுக்கே புரியும்..

நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க, தமிழக அரசு ஆண்டுதோறும் வாங்கும் கடன் அளவு அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில், திருப்பிச் செலுத்தும் அளவு குறைவாகவே உள்ளது. இதனால், தற்போது தமிழகத்தின் ஒவ்வொரு குடிமகனின் தலையிலும், 10 ஆயிரம் ரூபாய் கடன் சுமத்தப்பட்டுள்ளது.

மக்கள் பயன்படுத்தும் பெட்ரோல், டீசலில் ஒவ்வொரு லிட்டருக்கும் வசூலிக்கப்படும் கட்டணத்தில் பாதியளவு மாநில, மத்திய அரசுகளுக்கு வரியாகப் போகிறது. சாலை வரி, கல்வி வரி போன்ற சேவை வரிகள், சம்பளம் வாங்குவோரிடம் மாநகராட்சிகள் வசூலிக்கும் தொழில் வரி, இது தவிர ஆண்டுதோறும் வருமான வரி என, அனைத்து விதத்திலும் வரிகளைச் செலுத்தி, நடுத்தர வர்க்கத்தினர் தடுமாறிக் கொண்டுள்ளனர்.

மக்களின் இந்தச் சுமையை குறைக்க வேண்டிய அரசு, மேலும் மேலும் கடனை வாங்கி, அதைச் சரிகட்ட, இது போன்று புதுப்புது வழிகளில் வருவாய் தேடி வருகிறது.

கடந்த நான்காண்டு காலத்தில், தமிழக அரசு எந்த பொருளுக்கும் வரியை உயர்த்தாவிட்டாலும், "டாஸ்மாக்' வருமானம் மற்றும் உள்ளாட்சிகள் மூலம் வருவாய் உயர்வு போன்றவற்றால் சமாளித்து வருகிறது.

அதே சமயம், கடன் வாங்கும் அளவும் ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டுள்ளது. தற்போதைய நிலையில், தமிழக அரசுக்கு 73 ஆயிரம் கோடி ரூபாய் கடன் உள்ளது.

கடந்த 1991ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, முந்தைய அரசு 28 ஆயிரம் கோடி ரூபாயை கடனாக வைத்துவிட்டுச் சென்றதாகக் கூறி, புதிய வரிகளை விதித்தார். இதனால், மக்கள் மீதான சுமை அதிகரித்தது. ஆனால், அ.தி.மு.க., ஆட்சி முடியும் நிலையில், தமிழக அரசின் கடன் 53 ஆயிரம் கோடியாக உயர்ந்து இருந்தது.

இப்படி மாறி மாறி கடனை வாங்கினாலும், அதை நியாயப்படுத்தவும் ஆளுங்கட்சிகள் தவறவில்லை. வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள கடன் வாங்குவது அவசியம் என்றும், கடன் வாங்காமல் எந்த அரசும் செயல்பட முடியாது என்றும் நியாயப்படுத்துகின்றனர்.

கடந்த 1988-89 வரை, கடன்கள் ஆண்டுக்கு 1,027 கோடி, 1,554 கோடி ரூபாய் என்ற அளவில்தான் வாங்கப்பட்டது. திருப்பிச் செலுத்தியது போக, மீத கடன் சுமை, ஆண்டுக்கு 400 கோடி ரூபாய் அளவில் இருந்தது. ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்த கடன் சுமைதான், மொத்தமாக இன்றைக்கு 73 ஆயிரம் கோடி ரூபாயாக தமிழகத்தின் மீது உள்ளது. ஏறத்தாழ, தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடிமகன் பெயரிலும் 10 ஆயிரம் ரூபாய் கடன் சுமை உள்ளது.

ஏற்கனவே, மத்திய அரசு கொண்டு வந்துள்ள நிதி பொறுப்புடைமைச் சட்டப்படி, மாநில அரசின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதத்துக்கு மேல் கடன் பெறக்கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

அதற்கு மேல் கடன் வாங்கினால், மாநிலத்தின் நிதி நிலைமை பாதுகாப்பாக இல்லை என்று அர்த்தம். காரணம், அதற்கு மேல் கடன் வாங்கினால், வட்டியை மட்டுமே கட்ட முடியும்; அசலை திருப்பிச் செலுத்த முடியாது.

தமிழகத்தை பொறுத்தவரை, 10 சதவீதத்துக்கு உள்ளாகவே கடன் வாங்குகிறோம் என்றும், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதத்துக்கு குறைவாகவே, பட்ஜெட் நிதி பற்றாக்குறை ஏற்படுகிறது என்றும் கூறப்படுகிறது.

பொதுக் கணக்கை மட்டும் பார்க்காமல் மற்றவற்றையும் சேர்த்தால், 3 சதவீதத்துக்கு அதிகமாகவே இருக்கும் என்பதுதான் உண்மை. முந்தைய ஆட்சிகளில் கடனை திருப்பிச் செலுத்தும் அளவு கூடுதலாக இருந்தது.

1999ல் 8,545.81 கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்ட போதிலும், 5,438.15 கோடி திருப்பிச் செலுத்தப்பட்டது.

கடந்த 2000ம் ஆண்டில், 11 ஆயிரத்து 596 கோடியே 3 லட்சம் ரூபாய் கடன் வாங்கப்பட்டு, 7,719 கோடியே 99 லட்சம் ரூபாய் திருப்பிச் செலுத்தப்பட்டது.

2001 முதல் 2006 வரையிலான அ.தி.மு.க., ஆட்சியில், 65 ஆயிரத்து 627.63 கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்டு, 34 ஆயிரத்து 844.71 கோடி ரூபாய் திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் கடன் வாங்குவது குறைந்தும், திருப்பிச் செலுத்துவது அதிகரித்தும் வந்ததைக் காண முடிகிறது.

கடந்த 2006-ல் தி.மு.க., அரசு அமைந்த பின், 53,526.63 கோடி ரூபாய் கடன் பெறப்பட்டு, இதுவரை 19,155.84 கோடி ரூபாய்தான் திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளது.

அ.தி.மு.க., ஆட்சியைவிட தி.மு.க. ஆட்சியில் குறைவான அளவே கடன் வாங்கப்பட்டிருந்தாலும், திருப்பிச் செலுத்தும் தொகை மிகக் குறைவாக இருந்ததால், கடன் சுமை அதிகரித்துள்ளது.

பொதுக் கடனை பொறுத்தவரை, முந்தைய ஆண்டுகளில் பெற்ற கடனுக்கான அசல் மற்றும் வட்டி அடுத்தடுத்த ஆண்டுகளில்தான், திருப்பிச் செலுத்தப்படுகிறது. இருந்தாலும், கடன் சுமையைக் குறைக்க, திருப்பிச் செலுத்தும் தொகையை அதிகரித்து இருக்கலாம்.

ஆண்டுதோறும் பட்ஜெட் பற்றாக்குறையை சமாளிக்க, கூடுதலாக கடன் வாங்கி ஈடுகட்டுவது வழக்கமாகி விட்டது. இவ்வாறு ஈடுகட்டப்பட்டு, அதிகரித்துள்ள கடன் சுமை ஒவ்வொன்றும் மக்கள் தலையில்தான் விழுந்துள்ளது.

கடன் தொகை அதிகமானது எப்படி?

1989-ம் ஆண்டில் கடன் 602.31 கோடி

1990-ல் 755.60 கோடி

1991-ல் 874.36 கோடி

1992-ல் 943.78 கோடி

1993-ல் 1,044.68 கோடி

1994-ல் 1,625.71 கோடி

1995-ல் 1,192.57 கோடி

என்று திருப்பி செலுத்திய பின், ஆண்டுதோறும் கடன் சுமை இருந்து வந்தது.

பின்னர் அமைந்த தி.மு.க., ஆட்சியில்,

1996-ல் 1,442.26 கோடி

1997-ல் 1,724.92 கோடி

1998-ல் 2,159.64 கோடி

1999-ல் 3,107.66 கோடி

2000-ம் ஆண்டில் 3,876.04 கோடி

என்று கடன் சுமை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தது.

அதன் பின் வந்த அ.தி.மு.க., ஆட்சியில்

2001-ம் ஆண்டு 3,445.20 கோடி

2002-ல் 7,251.91 கோடி

2003-ல் 5,195.36 கோடி

2004-ல் 4,948.32 கோடி

2005-ல் 5,644.53 கோடி

என்று அதிகரித்தது.

தற்போதைய அரசு அமைந்த பின்

2006-ல் 2,456.91 கோடி

2007-ல் 4,643.03 கோடி

2008-ல் 9,482.21 கோடி

2009-ல் 9,928.71 கோடி

என்று திருப்பித் தராத கடன் சுமை அதிகரித்துள்ளது.

இது பற்றி தமிழகத்தின் நிதியமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் சமீபத்தில் சட்டமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசியபோது தெரிவித்த கருத்து முத்துக்கள் இவை..


"மாநிலத்தின் சமூக நலத் திட்டங்களால் ஒருபக்கம் செலவு அதிகரிக்கிறது. ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தியதால், அரசு ஊழியர்களுக்கு ஊதிய நிலுவைத் தொகை ரூ. 11,093 கோடி வழங்க வேண்டியுள்ளது. இதனால் அரசுக்கு ஆண்டுதோறும் ரூ. 5,156 கோடி தொடர் செலவு ஏற்படும்.

இந்த ஆண்டுக்கு மட்டும் ஊதிய உயர்வு காரணமாக, சுமார் ரூ. 7,500 கோடி கூடுதல் செலவும், சம்பளங்கள் மற்றும் ஓய்வூதியங்களுக்கான ஒட்டுமொத்த செலவு ரூ. 30,647 கோடியாகவும் இருக்கும். இது மாநிலத்தின் மொத்த வருவாய் செலவில் 52 சதவீதம் ஆகும்.

2008-2009ம் ஆண்டில் உணவு மானியம் ரூ. 1,950 கோடியாக இருந்தது. இப்போது, இது ரூ. 2,800 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஒரு கோடி ஏழைக் குடும்பங்களுக்கான மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட காப்பீட்டுத் திட்டங்களுக்காக அடுத்த நான்கு ஆண்டுகளில் ரூ. 2,080 கோடி செலவு ஏற்படும்.

கடந்த மார்ச் 31-ம் தேதியுடன் முடிந்த நிதியாண்டில் மாநில அரசின் கடன் ரூ. 74,456 கோடி. இது 2000-2001ம் நிதியாண்டில் ஆட்சியிலிருந்து திமுக விலகியபோது, ரூ. 28,685 கோடியாக இருந்தது.

ஐந்தாண்டுகளுக்குப் பிறகு, அதிமுக ஆட்சியில் இருந்து விலகியபோது, அவர்கள் வைத்துச் சென்ற கடன் தொகை ரூ. 57,457 கோடி. அதற்கு அடுத்த ஆண்டு ரூ. 60,170 கோடி என கடன் தொகை உயர்ந்து கொண்டே வருகிறது. நடப்பு நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை மேலும் அதிகரிக்கும்.

தமிழகத்தில் கடந்த மூன்றாண்டு காலத்தில் நிதித் துறை செம்மையாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது. மொத்த வருமானத்தில், 3 சதவீதம் அளவுக்கு நிதி பற்றாக்குறை பட்ஜெட்டில் இடம் பெறலாம் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு வரையிலும் மூன்று சதவீதம் அளவிலேதான் தமிழகத்தின் நிதி பற்றாக்குறை இருக்கிறது. ஆனால், வருங்காலத்தில் சற்று அதிகமாகலாம்.

தமிழகத்தில் நடப்பு நிதியாண்டில் நிதி நிலைமை சற்று கடினமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருபுறம் வருவாய் வளர்ச்சி சரிந்து வருகிறது. மறுபக்கத்தில் செலவினங்கள் அதிகரித்து வருகின்றன. மாநிலத்தின் சொந்த வரி வருவாயில், குறிப்பாக வணிக வரிகள் மற்றும் முத்திரைத்தாள் தீர்வைகளின் வளர்ச்சி விகிதம் பெரும் சரிவை சந்தித்துள்ளது.

மத்திய வரியில் இருந்து பெறப்பட்ட மாநில அரசின் பங்கு முதலில் எதிர்பார்க்கப்பட்ட தொகையைவிட ரூ. 986 கோடி குறைந்துள்ளது. மத்திய அரசில் இருந்து மாநில அரசுக்கு வழங்குகிற நிதிப் பகிர்வு ஒவ்வொரு ஆண்டும் குறைந்து வந்திருக்கிறது. மூன்றாவது திட்டக் குழு காலத்தில் அது 7.48 சதவீதமாக இருந்தது. 12வது திட்ட காலத்தில் அது 5.31 சதவீதமாக குறைந்துவிட்டது"

என்றார் பேராசிரியர் அன்பழகன்.

போதுமா...?

ஒரு பக்கம் நிதியுதவிகளாலும், இலவசத் திட்டங்களினாலும் மாநில அரசின் பட்ஜெட்டில் ஒட்டை விழுந்திருப்பதை நிதியமைச்சரே வேறு வழியில்லாமல் ஒத்துக் கொள்கிறார். ஆனால் இதை நிவர்த்தி செய்வது முடியாது என்பதையும் மறைமுகமாக ஒத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் ஆட்சிப் பொறுப்பிற்கு மறுபடியும் வரத் துடிப்பதால் இப்படியெல்லாம் இலவசங்களை வாரி வழங்கினால்தான் மக்கள் ஓட்டளிப்பார்கள் என்பதால் இதிலிருந்து இவர்களால் தப்பிக்க முடியவில்லை.

ஆக.. இவர்கள் ஆட்சிக்கு வந்து மீண்டும் கொள்ளையடிக்கத் துடிப்பதால்தான் இலவசத் திட்டங்கள் தொடர்கின்றன என்பதுதான் உண்மையே தவிர.. ஏதோ நிஜமாகவே ஒரு சிறந்த ஆட்சியைக் கொடுக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் அல்ல..

ஒரு கதை சொல்கிறேன்.. உங்களுடைய வீடாகவே இருக்கட்டும். வீடோ குடிசை வீடு என்று வைத்துக் கொள்ளுங்கள். சம்பளமோ மாதம் ஐந்தாயிரம் என்று வைத்துக் கொள்ளுங்கள். இந்தச் சம்பளத்திலேயே எல்.சி..டி. டிவி, பிரிட்ஜ், கட்டில், மெத்தை, என்று பலதரப்பட்ட பொருட்களையும் யாரிடமாவது கடன் பெற்றாவது வாங்குவீர்களா..?

இதுவெல்லாம் இருந்தால் மனம் சந்தோஷமாகத்தான் இருக்கும். ஆனால் திருப்பிக் கட்ட வேண்டுமே என்று யோசிக்க மாட்டீர்களா..? கடன் வாங்காமல் குடும்பம் நடத்த முடியாது எனில், இதுவரையில் குடும்பம் நடத்தியவர்களையெல்லாம் என்னவென்று சொல்வது..?

காலம் மாறுகின்றபோது தேவைகளும் மாறுகிறதே என்று நீங்கள் சொன்னாலும் தேவைகளை நினைத்துப் பார்க்க வைக்கும் ஆசைகளைத் தூண்டிவிட்டது உங்களுடைய திறந்துவிடப்பட்ட பொருளாதாரம்தான் என்பதும், அந்த நிறுவப்பட்ட திட்டமிடப்பட்ட பொருளாதார வளர்ச்சியால் அதிகம் வளர்ந்தது ஆதிக்கத்தில் இருந்தவர்கள் என்பதும்தான் உண்மை.

ஸோ.. இப்படியே போனால் நிலைமை என்ன..? எப்போது இந்தக் கடன்கள் தீரும்..? கடனை அடைக்க முடியாமல் போனால்.. போகாது.. மத்திய அரசு இருக்கிறது. அது கடனை அடைத்துவிடும். அந்த லூஸுகளுக்கும் இதே போல பல மடங்கு கடன் இருக்கிறதே.. அவர்கள் எப்படி அடைப்பார்கள்..? இல்லை.. இல்லை.. எப்பாடுபட்டாவது கூடுதலாக கரன்ஸி நோட்டுக்களை அடித்து வெளியி்ட்டு இதன் மூலமாவது கடனை அடைத்துவிடுவார்கள்..

கரன்ஸிகளை அதிகம் வெளியிட்டு கடனை அடைத்துவிடலாம் என்கிற அபார யோசனை அரசுகளுக்குத் தெரிந்திருந்தால் இவர்கள் ஏன் கடன் வாங்குகிறார்கள். வெறும் கரன்ஸி நோட்டுக்களை அச்சடித்து அதையே பயன்படுத்தியிருக்கலாமே.. எதற்காக கேவலமாக இன்னொருவரிடம் போய் கையேந்த வேண்டும்..?

அட போப்பா.. என்னவோ.. எவன் கடன் வாங்கினா என்ன..? எனக்கு டிவி வந்திருச்சு.. ஓசில கேஸ் வந்துச்சு.. ஓசில அரிசி, பருப்பெல்லாம் கிடைச்சுச்சு. நான் சாகுறப்பகூட ஓசில உதவித் தொகை என் குடும்பத்துக்கு கிடைச்சிரும்.. அப்புறம் நான் எதுக்கு இதைப் பத்தி யோசிக்கணும்.. அதான் நான் மண்ணோட மண்ணா ஆகியிருவனே..

இதைப் பத்தி யோசிக்க வேண்டியவன் நானில்லை.. எனக்கப்புறம் இங்க குடியிருக்கப் போறானுக பாரு.. நம்ம வாரிசுக அவங்க பாடு.. ஆட்சியாளர்கள் பாடு..! நான் இருக்கிறவரைக்கும் ஜாலியா, சந்தோஷமா, நிம்மதியா இருந்திருவேன்..!

என்ன ஒரு சுயநலம் நம் அனைவருக்குள்ளும்..!????

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக