கோரிக்கை பதிவு

ரேஷன் கார்டுக்காக அலைக்கழிக்கப்படும் கடலூர்வாசிகள்

புதிய ரேஷன் கார்டுகளுக்காகவும், ஏற்கெனவே உள்ள ரேஷன் கார்டுகளை தக்க வைத்துக் கொள்வதற்காகவும், அலுவலர்களால் கடலூர் மாவட்ட மக்கள் பெரிதும் அலைக்கழிக்கப்பட்டு வருகிறார்கள். 22 லட்சம் மக்கள்தொகை கொண்ட கடலூர் மாவட்டத்தில் தற்போது 6,43,675 ரேஷன் கார்டுகள் உள்ளன. கடலூர் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கார்டுகளில் போலி கார்டுகள் பல இருப்பதாக சந்தேகிக்கப்பட்டதன் அடிப்படையில், அது குறித்து ஓராண்டுக்கு முன் கணக்கெடுப்பு தொடங்கப்பட்டது. இதில் 1.14 லட்சம் ரேஷன் கார்டுகள் போலியானவை (குறிப்பிட்ட முகவரியில் அட்டைதாரர் இல்லாவிட்டால் போலி என அறிவிக்கப்படுகிறது) என்று கண்டறியப்பட்டது. இந்தக் கார்டுகளுக்கு ரேஷன் பொருள்கள் நிறுத்தப்பட்டன. போலிப் பட்டியலில் இடம்பெற்ற கார்டுதாரர்கள் ஆவணங்களைக் காண்பித்து தங்களது அட்டைகளைப் புதுப்பித்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான காலஅவகாசம் 31-1-2010 உடன் முடிந்து விட்டது. இதற்கிடையே போலிப் பட்டியலில் இடம்பெற்ற கார்டுதாரர்கள் சுமார் 30 ஆயிரம் பேர் மேல்முறையீடு செய்தனர். அந்த மனுக்கள் மீது கள ஆய்வு செய்து, கார்டுகள் புதுப்பிக்கப்பட்டு இருப்பதாக குடிமைப்பொருள் வழங்கல் துறை தெரிவிக்கிறது. ஆனால் ஏற்கெனவே அலுவலர்கள், கள ஆய்வு செய்து போலி கார்டுகள் என அறிவித்தது மற்றும் மேல்முறையீட்டின் பேரில் கள ஆய்வு செய்தது முறையாக நடைபெறவில்லை என்பது பாதிக்கப்பட்ட பொதுமக்களின் குற்றச்சாட்டு. சுமார் 70 ஆயிரம் பேருடைய ரேஷன் கார்டுகள் உண்மையானவைகளாக இருந்தும், போலிப் பட்டியலில் சிக்கியதால், அவர்கள் அலைக்கழிக்கப்பட்டு வருகிறார்கள். நகர்ப் புறங்களை எடுத்துக் கொண்டால், எடுத்துக்காட்டாக கடலூர் 1,2 வார்டுகளில் ஒரு கடையில் உள்ள 1500 கார்டுகளில் 250 கார்டுகள் போலியென அறிவிக்கப்பட்டது. இது முற்றிலும் தவறானது. மேல் முறையீடு செய்ததில் 60 கார்டுகள் மட்டும் புதுப்பிக்கப்பட்டன. போலி என நீக்கப்பட்டபோது கள ஆய்வு மேற்கொண்டது, மற்றும் மேல் முறையீட்டின் போது கள ஆய்வு மேற்கொண்டது முற்றிலும் சரியாக நடக்கவில்லை. சரியாகக் கள ஆய்வு மேற்கொள்ளாமல், திட்டமிட்டு குறிப்பிட்ட எண்ணிக்கை கார்டுகளை போலியானவை என்று அறிவித்துவிட்டார்கள் என்றார், கடலூர் நகர அனைத்து குடியிருப்போர் நலச் சங்க கூட்டமைப்பின் பொதுச் செயலர் மருதவாணன். கிராமப்புறங்களை எடுத்துக் கொண்டால், எடுத்துக்காட்டாக விருத்தாசலம் வட்டம் கார்மாங்குடி கிராமத்தில் கள ஆய்வுக்கு, முழுமையாக உதவி செய்தும் 647 கார்டுகளில் தகுதி உள்ள 48 கார்டுகள் போலியானவை என்று, வேண்டும் என்றே அறிவித்து இருக்கிறார்கள் என்கிறார் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயலட்சுமி வெங்கடேசன். இது குறித்து இந்திய நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச் செயலர் எம்.நிஜாமுதின் கூறுகையில், போலிக் கார்டுகளை நீக்கப்போகிறார்கள் என்ற அறிவிப்பு வந்ததுமே, உண்மையான போலி கார்டுதாரர்கள் உஷாராகி விட்டனர். அதிகாரிகள் உடந்தையுடன் தங்கள் கார்டுகள் போலிப் பட்டியலில் இடம்பெறாது பார்த்துக் கொண்டனர்.÷இதனால் போலிக் கார்டு பட்டியலில், கிராம மக்கள், நகரத்து அப்பாவி மக்களின் கார்டுகள் சிக்கிக் கொண்டன. மேல் முறையீடு செய்ய என்னதான் அறிவிப்பு வந்தாலும், அது மக்களை சென்றடையவில்லை. கள ஆய்வு முறையாக நடக்கவில்லை. கள ஆய்வு மேற்கொண்டபோது ஆய்வு செய்யப்பட்ட அறிக்கை நகல், ரேஷன் கார்டுதாரருக்கு வழங்கப்படாதது மிகப் பெரிய தவறு. திட்டமிட்டு குறிப்பிட்ட எண்ணிக்கை கார்டுகளை நீக்கி இருக்கிறார்கள் என்றார். இது குறித்து மாவட்ட வழங்கல் அலுவலர் தேவராஜிடம் கேட்டதற்கு, மேல் முறையீட்டு கார்டுகள் குறித்து, கள ஆய்வு முறையாக மேற்கொள்ளப்பட்டது. 30 ஆயிரம் கார்டுகள் புதுப்பிக்கப்பட்டு உள்ளன.மேல்முறையீட்டுக் காலம் பிப்ரவரி 15-ம் தேதி வரை நீடிக்கப்பட்டு உள்ளது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக